தமிழ்நாட்டிற்கு எவ்வளவு ஜிஎஸ்டி இழப்பு பாக்கி? எடப்பாடிக்கு ஸ்டாலின் கேள்வி.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பு விவரங்களை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கவேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை(ஜி.எஸ்.டி) செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை மத்திய பாஜக அரசு தர மறுக்கிறது. போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது” என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை அ.தி.மு.க. அரசும், முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியும், நிதியமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ஜி.எஸ்.டி சட்டத்தை செயல்படுத்துவதால், உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் முன்பே எழுப்பின. திமுகவும் இதை வலியுறுத்தியது. அப்போது, “ஜி.எஸ்.டி சட்டத்தை அமல்படுத்துவதால் மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பீடு 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும். இரு மாதங்களுக்கு ஒருமுறை இழப்பீடு வழங்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு சட்டரீதியாக நாடாளுமன்றத்தில் உறுதியளித்தது. அதை நம்பித்தான் மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி சட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரித்தார். மேலும், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 30.6.2017 நள்ளிரவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி சட்ட துவக்க விழாவுக்கு அன்றைய நிதியமைச்சர் ஜெயக்குமாரை அனுப்பி வைத்தார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த மறுநாள், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வரி விதிப்பு முறை” என்று அ.தி.மு.க. அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டு மகிழ்ச்சியடைந்தது.
“மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்ட வலுவுள்ள நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது” என்று கூறி, சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசின் 8.1.2018 அன்று ஆளுநர் உரையில், மத்திய பா.ஜ.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதே உரையில், “இந்தச் சட்டம் மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்” என்றும் புகழாரம் சூட்டப்பட்டது.
ஜி.எஸ்.டி சட்டத்தினை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற முனையும் போது - அ.தி.மு.க. எப்படி இந்த மசோதாவை முதலில் எதிர்த்தது என்ற விவரங்களை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விளக்கிக் கூறி - “வணிகர்களை, மாநில நிதி உரிமையைப் பாதிக்கும் இந்த சட்டத்தை அவசர லத்தில் நிறைவேற்ற வேண்டாம். தேர்வுக் கமிட்டிக்கு அனுப்புங்கள்” என்று எவ்வளவோ வலியுறுத்திக் கேட்டேன். எனது கோரிக்கையை நிராகரித்து விட்டு, அன்றைக்கு ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்தது.
ஆனால், அந்த சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. ஜி.எஸ்.டி சட்டத்தால் மாநிலத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு? அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு? நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இவை தொடர்பாக வெளிப்படையாகப் பேச அதிமுக அரசு மறுக்கிறது.
தற்போது, டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரையான இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரி மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவர்களுடன் தமிழக நிதியமைச்சர் செல்லவில்லை.
ஒருவேளை மத்திய பா.ஜ.க. அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோ!
எதற்கெடுத்தாலும் கடிதம் மட்டும் எழுதும் முதலமைச்சர் பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார். “ஆட்சியில் இருக்கப் போவது இதுவே கடைசிமுறை. ஆகவே நாம் எதற்காக மாநில அரசின் நிதி உரிமைக்காக மத்திய அரசுடன் மோதி, கடனாகப் பெற்ற பதவிக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்” என்ற அச்சத்தில், மாநில நிதி தன்னாட்சி உரிமையை ஒட்டுமொத்தமாக சரணாகதி செய்து விட்டு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஆகவே, ஜி.எஸ்.டி. சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு? வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சரும், நிதியமைச்சரும் ஒளிவு மறைவின்றி உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97,496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப்பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து - கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது.
ஆகவே, மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையைப் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பா.ஜ.க. அரசின் மீது வழக்குத் தொடர்ந்தாவது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டிடவும் - ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிடவும் முன்வர வேண்டும். இதில் அமைதி காப்பது, மாநிலத்திற்கு மேலும் சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.