உ.பி.யில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. மாயாவதி, அகிலேஷ் குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண், நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தீ வைத்து எரிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

இந்நிலையில், உன்னாவ் இளம் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்காத உ.பி. மாநில பாஜக அரசை கண்டித்து அகிலேஷ் யாதவ் இன்று தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், உ.பி.யில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுாப்பு இல்லை. இன்று உ.பி. மாநிலத்திற்கு கருப்பு தினம். உன்னாவ் இளம்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க பாஜக அரசு தவறிவிட்டது. முதல்வர், உள்துறைச் செயலாளர், டிஜபி ஆகியோர் ராஜினாமா செய்யாவிட்டால், நியாயம் கிடைக்காது. உன்னாவ் சம்பவத்திற்காக மாவட்டந்தோறும் கண்டன பொதுக்கூட்டம் நாளை நடத்தப்படும் என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், உ.பி.யில் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்காத நாளே இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தினமும் குற்றம் நடக்கிறது. ஆட்சியாளர்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. ஆளுநர் ஒரு பெண் என்பதால், அவருக்கு பெண்ணின் உணர்வு எப்படியிருக்கும் என புரிந்திருக்கும். அவர் தலையிட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

More News >>