கமல் பேச்சை திரைக்கதை, சினிமா என விமர்சித்தது ஏன்? - காயத்ரி ரகுராம் விளக்கம்
கமல் கட்சி தொடங்கிய போது ட்விட்டரில் விமர்சித்தது ஏன் என்று காயத்ரி ரகுராம் தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கமல் நேற்று முன்தினம் [21-02-18] மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து மதுரை பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது காயத்ரி ரகுராம் செய்ய ஒரு ட்வீட் செய்ய, அது பெரும் சர்ச்சையானது. அதில், ''நல்ல ஸ்கிரிப்ட். நாம் உணர்ந்த உண்மையான எண்ணங்களை 50% பிரதிபலித்தன. 25% திரைக்கதையாகவும், 25% சினிமாத்தனமாகவும் இருந்தது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
காயத்ரி ரகுராமின் இந்த ட்வீட் சர்ச்சையானதைத் தொடர்ந்து, தற்போது அதற்கு விளக்கம் அளித்தார். அதில், ''நான் தனிப்பட்ட நபருக்கோ அல்லது எந்த கட்சிக்கோ எதிரானவள் அல்ல. பொதுவான மனிதராக நான் சிந்திக்கிறேன். அப்போது எனக்குள் நிறைய கேள்விகள் எழுகின்றன. அதற்கான தீர்வை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். யாராவது அப்படி தீர்வை ஏற்படுத்தினால் நான் உள்பட எல்லோரும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், இது நடக்குமா என்பது சந்தேகம்தான். இதில் தவறாக ஏதுமில்லை.
நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் என் தந்தை கமல் சாரை நினைத்துப் பெருமைப்படுவார். எனக்கும் அந்தப் பெருமிதம் இருக்கிறது. என் குழந்தைப் பருவத்திலிருந்து நல்ல தலைவராக கமல் சாரைப் பார்க்கிறேன். கமல் சார் மிகச் சிறந்த தலைவராக இருப்பார். இப்போது கமல் சார் மிகப் பெரிய பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார். நாங்கள் அவருக்காக பிரார்த்தனை செய்வோம்'' என்று ட்வீட் தெரிவித்துள்ளார்.