அசுரன் நடிகை மஞ்சுவாரியருக்கு தொல்லை ... திரைப்பட இயக்குனர் கைது..
By Chandru
மலையாள நடிகை மஞ்சுவாரியர், சமீபத்தில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். பல ஆண்டுகளாக மலையாளத்தில் நடித்து வந்தாலும் முதன்முறையாக அசுரன் படம் மூலம் தான் தமிழில் நடிக்க வந்திருக்கிறார் மஞ்சுவாரியர். இப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் மஞ்சுவாரியர் மலையாள பட இயக்குனர் ஸ்ரீகுமார் என்பவர் மீது கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். (மலையாள திரைப்பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் நடிகர் மோகன்லால் நடித்த ஒடியன் என்ற படத்தை சென்ற ஆண்டு இயக்கினார். அப்படத்தில் மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது).
இந்நிலையில் ஸ்ரீகுமார் மீது மஞ்சுவாரியர் அளித்துள்ள புகாரில், 'அடிக்கடி ஸ்ரீகுமார் போன் செய்து மிரட்டல் விடுக்கிறார். என்னைப்பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். அந்த குற்றச்சாட்டுகளை ஏற்கனவே ஸ்ரீகுமார் மறுத்திருந்தார். ஆனாலும் ஸ்ரீகுமார் மேனனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலையானார்.
இதுகுறித்து ஸ்ரீகுமார் கூறும்போது, 'போலீஸார் என்னிடம் விசாரித்தனர். அப்போது என் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறியிருக்கிறேன். எனது வாக்குமூலத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப் பேன்' என்றார்.