உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு உள்ளதா? முதலமைச்சர் சவால்..
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டுள்ளார்.
கோவைக்கு நேற்று(டிச.8) வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்துதான் உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று விட்டு, தற்போது மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாக ஸ்டாலின் கூறுகிறார். உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என்பதை ஸ்டாலின் இப்போது தெளிவுபடுத்தி விட்டார். தேர்தலை தள்ளிப் போடுவதுதான் ஸ்டாலின் நோக்கம். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது. தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்பு, திராணி இருக்கிறதா என நாங்கள் இப்போது கேட்கிறோம்.
தமிழக அரசின் கஜானா காலியாகி விட்டதாக மூன்று ஆண்டுகளாக ஸ்டாலின் கூறிக் கொண்டிருக்கிறார். மக்களிடம் விஷமத்தனமாக கருத்துகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். ஆனால் அவரது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றிபெறும்.இ்வ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.