கர்நாடக இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை..

கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் 12ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, எடியூரப்பா அரசு கவிழாமல் தப்பியது.

கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்ற போதும், அதற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து, 2வது இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ம.ஜ.த. தலைவர் குமாரசாமிக்கு முதல்வர் பதவி அளித்தது.

இதன்பின், காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உருவெடுத்தனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், அந்த ராஜினாமாவை ஏற்காமல், அவர்களை எம்.எல்.ஏ.பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தார்.

எனினும், மெஜாரிட்டியை இழந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினார்கள். அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அளித்த தீர்ப்பில், இந்த 17 பேரையும் முந்தைய சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும். அதே சமயம், இந்த 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறினர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 பேர், முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து பாஜகவில் சேர்ந்தனர்.

இதற்கிடையே, காலியான 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 13 பேருக்கு பாஜக சீட் கொடுத்தது. முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருந்தது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு மொத்தமாக 101 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே, இந்த 15 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், 15 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 2 தொகுதிகளில் காங்கிரசும், ஒரு தொகுதியில் சுயேச்சை உறுப்பினரும் முன்னிலை வகிக்கின்றனர். இதன்மூலம், எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்து விடாமல் மெஜாரிட்டியை எட்டியுள்ளது.

More News >>