அயோத்தி வழக்கில் இந்து மகா சபாவும் சீராய்வு மனு தாக்கல்..

அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறொரு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்பு வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. அதே சமயம், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்த சித்திக் என்பவரின் வாரிசான மவுலானா சையத் ஆஷாத் ரஷீத், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்து மகாசபாவின் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் இன்று(டிச.9) கூறுகையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யவிருக்கிறது. பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரப்படும் என்று தெரிவித்தார்.

More News >>