தெலங்கானா என்கவுன்டர்.. போலீஸ் மீது நடவடிக்கை.. சுப்ரீம் கோர்ட் 11ல் விசாரணை

தெலங்கானா என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிந்து விசாரிக்க கோரிய மனுவை வரும் 11ம் தேதி எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

ஐதராபாத் புறநகரில் கடந்த நவம்பர் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) 4 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், திரையுலகினர் என்று பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுப்பினர்.

இந்நிலையில், பலாத்காரம் மற்றும் எரிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா, சென்னகேசவலு, நவீன் ஆகிய 4 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். அவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் கடந்த 6ம் தேதி அதிகாலையில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ேபாலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாகவும், அதனால் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.

இந்த என்கவுன்டரை பலரும் வரவேற்று, ஐதராபாத் போலீசாரை பாராட்டினர். அதே சமயம், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் செயல் அராஜகமானது, வேகமாக வழக்கை நடத்தி நீதிமன்றம் மூலம்தான் தண்டனை பெற்று தந்திருக்க வேண்டுமென்று அவர்கள் வாதாடினர்.

இந்நிலையில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை ஐதராபாத் போலீசார் சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், என்கவுன்டர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 2014ம் ஆண்டில் வகுத்துள்ள விதிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.

இதே போல், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், என்கவுன்டரை ஆதரித்த ஜெயாபச்சன், டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலங்கானா என்கவுன்டர் குறித்து சுப்ரீம் கோர்ட் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரப்பட்டிருக்கிறது.இம்மனுக்களை வரும் 11ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

More News >>