அயோத்தி வழககில் 40 சமூக ஆர்வலர்கள் சீராய்வு மனு தாக்கல்..

அயோத்தி வழக்கில் 40 சமூக ஆர்வலர்களும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறொரு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்பு வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. அதே சமயம், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்த சித்திக் என்பவரின் வாரிசான மவுலானா சையத் ஆஷாத் ரஷீத், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 40 பேர் கையெழுத்திட்டு, அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். ஷப்னம் ஆஸ்மி, ஹபிப் ஹர்ஷ்மந்தர், பாராக் நக்வி, நந்தினி சுந்தர், ஜான் தயாள் உள்ளிட்ட 40 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த மனுவில், அயோத்தி தீர்ப்பில் நிலப் பிரச்னையைத் தாண்டி 2 மத நம்பிக்கைகள் குறித்து தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. இது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், இதற்கு முழுக்க சந்தேகமின்றி நிரூபிக்கும் ஆவணம் கிடையாது. அதே சமயம், அந்த இடத்தில் பாபர் மசூதி இருந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. எனவே, இந்த பிரச்னையில் மதநம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளதால், அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

More News >>