இந்திய குடியுரிமை சட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்..
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று(டிச.9) குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நாளை இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படுகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியிலான அடக்குமுறைகளை அடுத்து, அங்கிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், பாஜகவுக்கு மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் மசோதா எளிதாக நிறைவேறியது. மாநிலங்களவையில் நாளை விவாதிக்கப்படுகிறது. அங்கும் அதிமுக, பிஜேடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மசோதாவை நிறைவேற்றியதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை இந்தியா கொண்டு வந்திருப்பது, சர்வதேச மனித உரிமைச் சட்டத்திறகும், இருநாட்டு ஒப்பந்தத்திற்கும் எதிரானது. இந்து ராஷ்டிரம் என்ற ஆர்.எஸ்.எஸ். எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மோடி அரசு செயல்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.