எடப்பாடி கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் - டி.டி.வி. தினகரன்
உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் கூறினார்.
டி.டி.வி. தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்(அ.ம.மு.க), தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: அ.ம.மு.க, அதிகார வர்க்கத்தின் இடையூறுகளை தாண்டி, தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அம்மாவிடம் ஆசி பெற வந்தோம்.
உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சிக்கு பொது சின்னம் தரப்பட வேண்டும். ஆனால், அதை தராமல் மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையத்தால் பதிவு பெற்ற கட்சிக்கே சின்னம் தருவதற்கு மாநில தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. எங்கள் வழக்கறிஞர் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து பேசுவார். அதற்கு பிறகு நாளை நீதிமன்றத்திற்கு செல்வோம்.
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் விரோத பழனிசாமி கும்பலுக்கு நல்ல பாடம் புகட்டுவோம். ரஜினி, கமல் யாரும் என்னிடம் பேசவில்லை. சட்டமன்றத் தேர்தல் நடைபெற கால அவகாசம் இருக்கிறது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.இலங்கை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.