ஸ்டாலினுக்கு பொருந்தும் பாரதியாரின் பாடல்.. ஜெயக்குமார் கிண்டல்
நெஞ்சில் உரமுமின்றி என்று தொடங்கும் பாரதியார் பாடல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
பாரதியாரின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், வளர்மதி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின்பு, அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே, வாய்ச் சொல்லில் வீரரடி' என்ற பாரதியாரின் பாடல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிச்சயமாக பொருந்தும்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு 0.01 சதவீதம் கூட பாதிப்பில்லை. இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜெயலலிதா முன்பே வலியுறுத்தியுள்ளார், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம்.
நடிகர்கள் அவர்களுடைய விளம்பரத்துக்காக கேள்விகளை முன்வைப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்லி அவர்களை பிரபலப்படுத்த விரும்பவில்லை. தெலங்கானாவில் பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது சரியான விஷயம். குற்றம் நடக்காமல் பார்த்து கொள்வதுதான் அரசின் கடமை.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். காவலன் ஆப்சை 2 லட்சம் பேர் டவுன்லோடு செய்திருக்கிறார்கள். சென்னைதான் பாதுகாப்பான நகரம். நாட்டிலுள்ள 16,000 காவல் நிலையங்களில் தேனி மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தில் உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.