பிரதமர் மோடியின் சென்னை வருகை அரசியல் மாற்றத்துக்கா..?

'பிரதமர் மோடி இன்று சென்னை வருவதையடுத்து தமிழக அரசியலில் எதிர்பார்த்த அ.தி.மு.க-வின் அரசியல் நிலை மாற்றம் பெறுமா' என அரசியல் வல்லுநர்கள் இடையே விவாதம் எழுந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் இரண்டாகப் பிளந்த அ.தி.மு.க திடீரென கட்சியின் நலனுக்காக இணைவதாக அறிவித்தது. இதையடுத்து கட்சியின் இரட்டை இலையில் ஒரு இலையை சுமந்ததாகக் கூறப்படும் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் மற்றொரு இலையைச் சுமந்த பன்னீர்செல்வம் கட்சியின் மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

அதன் பின்னரான அ.தி.மு.க ஆட்சியில் அளவுக்கு அதிகமாகவே காவி வாசம் வீசியதாகக் கூறப்பட்டாலும் அமைச்சர்களும் சட்டசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து மறுத்த வண்ணமே இருந்தன.

ஆனால், மிகவும் சமீபத்தில், 'பிரதமர் மோடி சொல்லித்தான பிளவுபட்டிருந்த அ.தி.மு.க இணைந்தது. நான் எடப்பாடியார் அணியுடன் இணைந்தேன், துணை முதல்வர் ஆனேன்' எனத் தன் கட்சித் தொண்டர்களிடம் இணைப்புக்கானக் காரணத்தை விவரிப்புடன் அறிவித்தார் துணை-முதல்வர்.

சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்கும் விழாவுக்கு சிறப்பு விருந்தினராகத் தலைமை ஏற்க ஒப்புதல் தராத பிரதமர் மோடி, பன்னீர்செல்வத்தின் அறிவிப்புக்குப் பின்னர் உடனடியாக 'அம்மா மானியம் ஸ்கூட்டர்' வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வருகிறார்.

இவ்வளவு நடந்த பின்னரும் அ.தி.மு.க செய்தித்தொடர்பாளர் பொன்னையன், "நாங்கள் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க பா.ஜ.க-வின் காலில் ஒரு நாளும் விழவில்லை. அம்மா உயிருடன் இருக்கும்போதே பிரதமர் மோடியுடன் நட்பு ரீதியாகத் தானே பழகி வந்தோம்" என அறிக்கைவிடுகிறார்.

"கேக்குறவன் 'எது'வாகவோ இருந்தால் குத்துறவன் ஊசிக்குப் பதிலாக உலக்கையில் குத்துவானாம்" என தமிழக அரசியல் வல்லுநர்களும் பழமொழி பேசிக்கொண்டு மட்டுமே விவாதித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

More News >>