உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த 5ம் தேதி விசாரணை நடத்தியது. பின்னர், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தனர். இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 4 மாதங்களில் மறுவரையறை செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை அடுத்து, 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் ஏற்கனவே அறிவித்த டிச.27, 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனு தாக்கல் டிச.9ம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் முறையாக இடஒதுக்கீடு செய்யாமல் மீண்டும் அவசரமாக உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது என்று திமுக, காங்கிரஸ் தரப்பில் மீண்டும் புதிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உள்ளாட்சி தேர்தலை அவசர, அவசரமாக பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்துகிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேர்தல் நடத்த வேண்டும். அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

காங்்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ப.சிதம்பரம் ஆஜராகி, புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கும் வார்டு மறுவரையறை செய்து அதன்பின்பே இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற முடியும். அப்படி மறுவரையறை முழுமையாக செய்யாமல் தேர்தல் நடத்தினால் குழப்பம் வரும்என்று வாதாடினார்.தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படிதான் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. மனுதாரகள் பொய்யான புகார்களை கூறுகின்றனர். தேர்தலை தள்ளிப் போடுவதற்காக வழக்கு நடத்துகின்றனர் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டு மறுவரையறை செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இப்போது அறிவித்திருப்பது அந்த அடிப்படையில் இருந்தால் தேர்தலை நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டனர்.

More News >>