தெலங்கானா என்கவுன்டர்.. முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை

தெலங்கானா என்கவுன்டர் குறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

ஐதராபாத் புறநகரில் கடந்த நவம்பர் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) 4 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், திரையுலகினர் என்று பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுப்பினர்.

இந்நிலையில், பலாத்காரம் மற்றும் எரிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா, சென்னகேசவலு, நவீன் ஆகிய 4 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். அவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் கடந்த 6ம் தேதி அதிகாலையில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ேபாலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாகவும், அதனால் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.

இந்த என்கவுன்டருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், என்கவுன்டர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 2014ம் ஆண்டில் வகுத்துள்ள விதிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியிருந்தனர்.

இதே போல், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், என்கவுன்டரை ஆதரித்து பேசிய ஜெயாபச்சன், டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலங்கானா என்கவுன்டர் குறித்து சுப்ரீம் கோர்ட் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இம்மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. அப்போது இதே போன்ற வழக்கை தெலங்கானா ஐகோர்ட் விசாரித்து வருவது குறித்து நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு கொண்ட நீதிபதிகள், தெலங்கானா என்கவுன்டர் தொடர்பாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடுவோம் என்றனர். தாங்கள் நியமிக்கும் முன்னாள் நீதிபதி விசாரணை கமிஷன் டெல்லியில் இருந்தே விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தங்கள் விசாரணையை நாளைக்கு(டிச.12) தள்ளி வைத்தனர்.

More News >>