தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுகவினரால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படங்களை அலங்காரம் செய்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், டிடிவி தினகரன் அணியினரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதன் ஒரு பகுதியாக, அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார்.குறிப்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

இதைதவிர, சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 28ம் தேதி வரை சுமார் 700 சிறப்பு மருத்துவ முகாம்களும், மார்ச் 6ம் தேதி வரை 700 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1400 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

More News >>