குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக அசாம், திரிபுராவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து..

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, அசாம், திரிபுராவில் நடைபெறவிருந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் கவுகாத்தியில், அசாம் கிரிக்கெட் அணிக்கும், சர்வீசஸ் போர்டு அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வந்தது.

இதே போல், திரிபுராவின் அகர்தலாவில் திரிபுரா அணிக்கும், ஜார்கண்ட் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்று வந்தது. நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அசாம், திரிபுரா மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், கிரிக்கெட் போட்டி நடைபெற்றால், வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, கடைசி நாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து, கிரிக்கெட் போர்டு பொது மேலாளர் சபா கரீம் கூறுகையில், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளின் பாதுகாப்புதான் மிக முக்கியமானது. எனவே, போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வீரர்களை ஓட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டிருக்கிறோம். போட்டி மீண்டும் நடத்தப்படுமா அல்லது புள்ளிகள் பிரித்து தரப்படுமா என்பது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றார்.

 

More News >>