குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்.. சட்டம் அமலுக்கு வந்தது..
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய பாஜக அரசு, இந்திய குடியுரிமைச் சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி, கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிற சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. இதையடுத்து, முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். மக்களவையில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் எளிதாக நிறைவேறியது.
அதே சமயம், மாநிலங்களவையில் நேற்று முன்தினம்(டிச.11) எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து நீண்ட நேரம் பேசினர். 6 மணி நேரம் நடந்த விவாதத்தின் இறுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார். பின்னர், மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 125 பேரும், எதிர்ப்பாக 105 பேரும் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதா குடியரசு தலைவருக்கு உடனடியாக அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று(டிச.12) ஒப்புதல் அளித்தார். இதனால், குடியுரிமை திருத்தச் சட்டமசோதா-2019 அமலுக்கு வந்துள்ளது. தற்போது இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்துக்கள் உள்பட 6 மதத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகள் இங்கு வசித்திருந்தால் குடியுரிமை வழங்கப்படும்.
இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அசாம், திரிபுரா மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கவுகாத்தி, திப்ரூகர், தேஸ்பூர், ஷில்லாங் உள்ளிட்ட பல ஊர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1971 மார்ச் 24ம் தேதிக்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து வந்து அசாம் மாநிலத்தில் குடியேறிய எல்லா மதத்தினருக்கும் குடியுரிமை தரலாம். அதற்கு பின்பு வந்தவர்களுக்கு தரக் கூடாது என்று அசாம் ஒப்பந்தம்-1985ல் கூறப்பட்டிருக்கிறது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் பூர்வீகச் சொத்து, உரிமைகள் பறிபோய் விடும் என்று அம்மாநில மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம், பழங்குடியினர் வசிக்கும் அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த சட்டத்திற்கு அம்மாநிலங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.