பிரிட்டனில் மீண்டும் பிரதமராகிறார் ஜான்சன்.. கன்சர்வேடிவ் அமோக வெற்றி

பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது. அதனால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகிறார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென்று, பிரிட்டனில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து, பிரிட்டனுக்கு சாதகமான அம்சங்களுடன் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து விட்டு, வெளியேற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

வெளியேறுவதற்கான பிரக்சிட் தீர்மானத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் போனதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சிப் பிரதமர் தெரசா மே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி விலகினார். அதைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியில் நடந்த உட்கட்சி தேர்தலின் மூலம் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு பிரதமரானார். ஜான்சனாலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என கூறப்பட்டது.

அதே போல், கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டிக்கு தேவையான 326வது தொகுதியின் வெற்றி அறிவிக்கப்பட்டதும், போரிஸ் ஜான்சன் உற்சாகமாக பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், மிகவும் பலம் வாய்ந்த அரசாக கன்சர்வேடிவ் கட்சியின் அரசு அமைகிறது. பிரக்சிட் தீர்மானத்தை விரைவில் நிறைவேற்றி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டுமென்றுதான் இவ்வளவு பெரிய வெற்றியை பிரிட்டன் மக்கள் தந்துள்ளனர். அது மட்டுமல்ல, பிரிட்டன் மக்களை ஒன்றுபடுத்தி, சிறப்பான வளர்ச்சியை எட்ட வேண்டுமென்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

More News >>