நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு.. வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி..
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று(டிச.13), வீரமரணமடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போது லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாதிகள் 5 பேர் இயந்திர துப்பாக்கிகளுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வரிசையாக பாதுகாப்பு படை வீரர்களை சுட்டனர். பின்னர், நாடாளுமன்றத்திற்கு ஊடுருவ முயன்றனர். ஆனால், இந்திய வீரர்கள் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை போற்றி செய்தி வெளியிட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி, பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2001 தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ்(சி.ஆர்.பி.எப்), இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, சிறப்பு பாதுகாப்புபடை(எஸ்பிஜி), தேசிய பாதுகாப்புபடை(என்.எஸ்.ஜி) டெல்லி போலீஸ் மற்றும் உளவு பிரிவு(ஐ.பி) ஆகியவை ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன.