திருட்டுப் பட்டம் கட்டி பழங்குடி இளைஞர் அடித்துக் கொலை - முதல்வர் கண்டனம்
கேரள மாநிலம், அட்டப்பாடியில் பழங்குடி இளைஞர் ஒருவர், பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியை ஒட்டிய கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லான். இவரது மகன் மது (27). மனநிலை பாதிக்கப்பட்டவர். அட்டப்பாடி, கடுகுமன்னா காட்டுப்பகுதிகளில் சுற்றித் திரிவது இவரின் வழக்கமான நடவடிக்கை.
இந்நிலையில், அட்டப்பாடி, தவாலம், முக்கலி ஆகிய பகுதிகளில் கடந்த சில காலமாகவே, உணவுப்பொருட்கள் திருட்டு நடந்து வந்துள்ளது. திருட்டில் ஈடுபட்டவரின் உருவம் சிசிடிவி-யிலும் பதிவாகியுள்ளது. அந்த படம், மதுவின் முகச்சாயலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மதுதான் திருட்டில் ஈடுபட்டு வருகிறார் என்று முடிவு கட்டிய கிராம மக்கள் கடுகுமன்னா காட்டுப்பகுதிக்கு மதுவைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, கிராம மக்கள், அவரை மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவரது உடலை சின்னாபின்னப் படுத்தியுள்ளனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மதுவை மீட்டு, ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கொட்டாதராவில் உள்ள பழங்குடி சிறப்பு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஜீப்பிலேயே மது இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயனும், மது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள பினராயி விஜயன், “இத்தகைய மிருகத்தனமான செயல்கள், அறிவார்ந்த சமூ கத்திற்கு பொருத்தமானது அல்ல; நாகரிகமான சமுதாயமாக நாம் உயர்ந்துவிட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கிறோம்; ஆனால், நடந்த சம்பவம் நாகரிக சமூகமாக நம்மைக் காட்டவில்லை; இது கேரள மாநிலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், குற்றம் இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்குத் தாம் உத்தரவிட்டதாகவும், அதன் பேரில் தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.