குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு...மேற்குவங்கம், உ.பி.க்கும் பரவியது போராட்டம்
வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்த போராட்டங்கள் நேற்று(டிச.13) மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பரவியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். எனினும், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறி, அதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வந்து அசாமில் குடியேறியவர்களுக்கு இந்த சட்டத்தால் குடியுரிமை கிடைக்கும். ஆனால், அதன் மூலம் தங்கள் சொத்துக்களுக்கும், உரிமைகளுக்கும் பங்கம் ஏற்படும் என்று அம்மாநிலத்தில் உள்ள பூர்வகுடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கவுகாத்தியில் போராட்டங்களை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர்.
அசாம் மக்களின் உரிமைகளை விட்டு தர மாட்டோம் என்று கூறியுள்ள முதல்வர் சர்வானந்த் சோனாவால், அதற்காக வன்முறைகளை ஏற்று கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளார். இதே போல், அருணாசலப் பிரதேசம், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களிலும் போராட்டங்கள், தீவைப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இதனால், வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கம், உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வெடித்தன.
மேற்கு வங்கத்தில் ஹவுரா புறநகர், முர்ஷிதாபாத், பிர்பூம், பர்துவான் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூடுதல் டிஜிபி கியான்வந்த் சிங், மாநிலத்தில் சட்டம்ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் நேற்று பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட முஸ்லிம் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.