அசாமில் ஊரடங்கு தளர்வு.. போராட்டங்கள் குறைந்தது..
அசாமில் கடந்த நான்கைந்து நாட்களாக தீவிரமாக இருந்த போராட்டங்கள் தற்போது குறைந்து விட்டது. இதையடுத்து, இன்று கவுகாத்தியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
மத்திய பாஜக அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளில் மதரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தப்பட்ட இந்துக்கள், பார்சி, பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு தஞ்சம் அடைந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை தரப்படும்.
இந்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, அசாமில் வங்கதேசத்தில் இருந்து வந்து தஞ்சமடைந்தவர்கள் அதிகமாக உள்ளதால், அவர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 1971ம் ஆண்டு மாா்ச் 24ம் தேதிக்குப் பிறகு வங்கதேசத்திலிருந்து அசாமிற்கு வந்து சட்டவிரோதமாகக் குடியேறியவா்கள் அனைவரும் வெளியேற்றப்படுவாா்கள் என்று கடந்த 1985ம் ஆண்டு மத்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. அதை மீறும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளதாக போராட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த 2, 3 நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடந்ததால், கவுகாத்தி உள்பட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று போராட்டங்கள் குறைந்ததால், கவுகாத்தியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெட்ரோல் பங்க்குகள், ஷாப்பிங் மால் மற்றும் வர்த்தக நிறுவனங்களி்ல் கூட்டம் அலைமோதியது. மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளை வாங்கிச் சென்றனர்.