மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. நான் ராகுல்சாவர்க்கர் அல்ல.. ராகுல் ஆவேசம்

நான் ராகுல்சாவர்க்கர் அல்ல, ராகுல்காந்தி. மன்னிப்பு கேட்கவே மாட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தேசத்தை காப்போம் என்ற பெயரில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று(டிச.14) பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்பட்டது. இதில், கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். காங்கிரசைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர்.கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். அவர் பேசியதாவது:-

நமது நாட்டின் நிலையான பொருளாதாரம்தான் நாட்டின் சக்தியாக இருந்தது. எதிரிகளால் கூட அதை அழிக்க முடியவில்லை. ஆனால், இன்று பிரதமர் மோடி தனி ஆளாக நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கொண்டிருக்கிறார். அவருக்கு எப்போதும் தனது பதவியை பற்றிய நினைப்புதான் இருக்கிறது.பொருளாதாரம் சீரழிவது பற்றியோ, இளைஞர்கள் வேலை இல்லாமல் துன்பப்படுவது பற்றியோ ஆளும் பாஜக கட்சிக்கு கவலையில்லை. ஆனால், நாட்டுக்காக தியாகம் செய்ய காங்கிரசார் தயாராக இருக்கிறார்கள்.

பலாத்கார சம்பவங்கள் அதிகமாகி வருவதைப் பற்றி ஒரு கருத்தை சொன்னதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் பேசுகிறார்கள். நான் ராகுல் சாவர்க்கர் அல்ல. ராகுல் காந்தி. உண்மையை பேசியதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். உயிரை விடக் கூட தயாராக இருக்கிறேன். மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசார் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். உண்மையில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததற்காக பிரதமர் மோடியும், அவரது உதவியாளரும்(உள்துறை அமைச்சர் அமித்ஷா) மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததால், அசாம், மேகாலயா, திரிபுரா போன்ற வட கிழக்கு மாநிலங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. அங்கு நடக்கும் போராட்டங்களை மறைக்க திசைதிருப்பும் வேலைகளில் பாஜகவினர் ஈடுபடுகின்றனர். முக்கிய பிரச்னைகளை திசைதிருப்புவதற்கு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி, நாட்டை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மோடி செய்து வருகிறார்.

மக்களிடம் வாக்குளை பெற்று ஆட்சிக்கு வந்த அவர், மக்களின் பணத்தை பறித்து கொண்டிருக்கிறார். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததற்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஒரு முக்கிய காரணமாகும்.உண்மையை மறைப்பதற்காக, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் கணக்கிடும் முறையை மாற்றினார்கள். அப்படியும் அது 4 சதவீதமாக குறைந்துள்ளது. ஏற்கனவே பின்பற்றி வந்த முறையில் பார்த்தால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகததம் வெறும் 2.5 சதவீதமாகத்தான் இருக்கும்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக மோடி சொன்னார். அதில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இது வரை மீட்க முடியவில்லை இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

More News >>