குடியுரிமை சட்டத்தில் மாற்றம் வரலாம்.. அமித்ஷா சூசகத் தகவல்
ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்தால், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தால் அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.
ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கிரிடிக் என்ற இடத்தில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று(டிச.14) தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:அசாம் மற்றும் வடகிழக்கு மாநில மக்கள், குடியுரிமை சட்டத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கலாசாரம், மொழி, சமூக அடையாளம், அரசியல் உரிமைகள் என்று எதுவுமே இந்த சட்டத்தால் பாதிக்கப்படாது என்று நான் உறுதியளிக்கிறேன்.
குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததும் மேகாலயா முதல்வர் கொன்ராட் சங்மா என்னை வந்து சந்தித்து, சட்டத்தைப் பற்றி பேசினார். அந்த சட்டம் தங்கள் மாநிலத்திற்கு பிரச்னையாக உள்ளதாக கூறினார். ஆனால், அது எந்த பிரச்னையையும் ஏற்படுத்தாது என்பதை நான் அவருக்கு விளக்கினேன்.
ஆனாலும், சட்டத்தில் ஏதாவது மாற்றம் செய்தாக வேண்டுமென்று வலியுறுத்தினா். நான் அவரிடம் கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு வரச் சொல்லியிருக்கிறேன். மேகாலயா பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிப்போம். வடகிழக்கு மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை மோடி அரசுக்கு உள்ளது.
முத்தலாக் தடை சட்டம், 370வது பிரிவு ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற உறுதியான முடிவுகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் வாக்குவங்கி அரசியலுக்காக மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக தீவிரவாதம் வளருவதற்கு உடந்தையாக இருந்துள்ளது.
ராகுல்காந்தியின் காங்கிரஸ் 55 ஆண்டுகளில் ஜார்கண்டில் என்ன செய்திருக்கிறது. பாஜகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் பல வளர்ச்சிப் பணிகளைற்கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.