நேபாளம்: மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து 14 பேர் சாவு..
நேபாளத்தில் மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 14 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.
நேபாளத்தில் சிந்துபால்சோக் பிராந்தியத்தில் அரானிகோ நெடுஞ்சாலையில் இன்று காலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் திடீரென கவிழ்ந்தது. அந்த பஸ், காலிஞ்சோக் பகுதியில் இருந்து பக்தாபூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
கவிழ்ந்த வேகத்தில் சில அடி தூரத்திற்கு பஸ் இழுத்து செல்லப்பட்டது. இதில் 12 பேர் அதே இடத்தில் பலியாகினர். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். மேலும் 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பஸ் படுவேகமாக சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பஸ் விபத்துக்குள்ளானதும் டிரைவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.