சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்..

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி, சென்னை ஐ.ஐ.டி.யில் படித்தார். ஐ.ஐ.டி விடுதியிலேயே அவர் தங்கி படித்து வந்தார். கடந்த நவம்பர் 9-ம் தேதியன்று, விடுதி அறையில் பாத்திமா தூக்கில் தொங்கியிருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.அவர் இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் சில மெசேஜ் பதிவு செய்து வைத்திருந்தார். ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்பட 3 பேராசிரியர்களின் துன்புறுத்தலே தனது சாவுக்கு காரணம் என்று அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், பாத்திமாவின் தந்தை லத்தீப், சில குற்றச்சாட்டுகளை கூறினார். தாங்கள் வருவதற்கு முன்பே தங்கள் மகள் தூக்கு போட்டிருந்த இடத்தில் அவசரமாக எல்லாவற்றையும் அகற்றி விட்டனர் என்றும் பாத்திமா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் கூறினார்.இதையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஐ.ஐ.டி. பேராசிரியர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். திமுக உள்பட எதிர்க்கட்சிகளும் மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தினர். இதன்பின், பாத்திமா தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி மேற்பார்வையில் பெண் போலீஸ் அதிகாரியான கூடுதல் துணை கமிஷனர் மெகலினா விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே, பாத்திமாவின் தந்தை லத்தீப், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது மகள் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். அதன்பிறகு, டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, பாத்திமா மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

More News >>