அப்போலோவிடம் ஜெயலலிதாவின் டி.என்.ஏ.வை கேட்கும் நீதிமன்றம்

ஜெயலலிதாவின் உயிரி மாதிரிகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்கவும் அப்பல்லோவிற்கு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என்றும், இதை நிரூபிக்க எனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, தீபா, தீபக் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சைலஜா என்ற சகோதரியே ஜெயலலிதாவிற்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அம்ருதா வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு வெள்ளியன்று (பிப். 23) நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர், அம்ருதாவிற்கு இப்போது 30 வயது ஆகிறது. எனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை உள்ள ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றார்.

தீபா மற்றும் தீபக் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்களும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றனர். அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெயலலிதாவின் உயிரி மாதிரிகள் இருக்கிறதா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை.

எனவே இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், புகழேந்தியை இந்த வழக்கில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, இந்த வழக்கில் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் எதிர் மனுதாரராக இருக்கும் போது, ரத்து சொந்தம் அல்லாதவர்களை எப்படி இணைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரி மாதிரிகள் இருக்கிறதா? என்பது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More News >>