பாஜக கட்டாயப்படுத்தியதால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தோம்.. அதிமுக எம்.பி. பகீர் தகவல்

நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தோம் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தற்போது அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். அவர் இந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததற்கு நிர்ப்பந்தம்தான் காரணம். பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் கட்டாயப்படுத்தப்பட்டதால் அந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டியதாயிற்று. குறிப்பாக, மாநிலங்களில் ஆளும் கட்சிகளை, அந்த சட்டத்தை ஆதரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.

பாஜக எப்போதுமே நேரடியாக நம்மை நிர்ப்பந்தம் செய்ய மாட்டார்கள். உதாரணமாக, இந்த சட்டம் தொடர்பாக அதிமுக கட்சி அலுவலகத்தில் நாங்கள் விவாதித்து கொண்டிருந்த போது, தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு துணை செயலாளர் எனக்கு போனில் தொடர்பு கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துதான் நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனாலும், நான் அந்த சட்டத்தின் மீதான விவாதத்தில் பேசிய 5 நிமிடங்களில், குடியுரிமை வழங்கும் பட்டியலில் முஸ்லிம்கள் விடுபட்டதையும், இலங்கை தமிழர்கள் விடுபட்டதையும் குறிப்பிட்டேன்.

இந்தியாவை இந்து நாடாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவினரின் நோக்கம். அதை நேரடியாக செய்யாமல் பல்வேறு விதங்களில் செய்து வருகிறார்கள். அப்படி செய்வதன் மூலம் இந்துக்களின் வாக்குகள் மொத்தமும் தங்களுக்கு கிடைக்கும் என்றும், வேறு எந்த கட்சிக்குமே வாய்ப்பு இல்லாமல் செய்து விடலாம் என்றும் கருதுகிறார்கள். பாஜக தலைவர்கள், குறிப்பாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை செய்து வருகிறார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஆனாலும், முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காது. இது போன்ற விஷயங்களில் அதிமுக தனது கட்சி நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர்.பி. இப்படி கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜகவின் அடிமையாக எடப்பாடி பழனிசாமி அரசும், அதிமுகவும் உள்ளது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதை ஒப்புக் கொள்ளும் வகையில், எஸ்.ஆர்.பி பேட்டி அளித்திருக்கிறார். இது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மெல்லுவதற்கு கிடைத்த அவல் ஆக இருக்கிறது.

More News >>