குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: துணை செயலர் உத்தரவை கேட்டு அதிமுக எம்.பி.க்கள் வாக்களிப்பதா? தலைகுனிவு என ப.சிதம்பரம் கருத்து..
குடியுரிமை திருத்த சட்டமசோதாவில் தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்று அதிமுக எம்.பி. கூறியிருப்பது தலைக்குனிவு என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தற்போது அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார். அவர் இந்து ஆங்கில நாளேட்டுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததற்கு பாஜகவின் நிர்ப்பந்தம்தான் காரணம். பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் கட்டாயப்படுத்தப்பட்டதால் அந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டியதாயிற்று. குறிப்பாக, மாநிலங்களில் ஆளும் கட்சிகளை, அந்த சட்டத்தை ஆதரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.
பாஜக எப்போதுமே நேரடியாக நம்மை நிர்ப்பந்தம் செய்ய மாட்டார்கள். உதாரணமாக, இந்த சட்டம் தொடர்பாக அதிமுக கட்சி அலுவலகத்தில் நாங்கள் விவாதித்து கொண்டிருந்த போது, தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு துணை செயலாளர் எனக்கு போனில் தொடர்பு கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துதான் நாங்கள் வாக்களிக்க வேண்டுமென அறிவுறுத்தினார் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஆதரித்ததற்கு அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறியுள்ள காரணம் கவலைக்குரியது, கேலிக்குரியது.தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு.இவ்வாறு சிதம்பரம் கூறியிருக்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான இன்னொரு பதிவில் அவர் கூறியிருப்பதாவது:இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' என்ற கேள்விக்கு என்ன பதில்? இலங்கைத் தமிழர்கள் என்றல்லவா அவர்களைப் பார்க்க வேண்டும்? அவர்களில் பெரும்பான்மையானவர் இத்துக்கள் என்பதை அரசு மறந்து விட்டதா?
இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.