ரேப் இன் இந்தியா பேச்சு.. உயிரை விட்டாலும் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் - ராகுல்காந்தி
ரேப் இன் இந்தியா என்று ராகுல்காந்தி, பொதுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.
ஜார்கண்டில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா என்று சொன்னார். ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? ரேப் இன் இந்தியா என்று ஆகி விட்டது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அதற்கு பிறகு அந்த பெண் விபத்தில் சிக்கினார். இந்த சம்பவத்தைப் பற்றி பிரதமர் வாயே திறக்கவில்லை.. என்று குறிப்பிட்டார்.
இதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் பாஜகவின் பெண் எம்.பி.க்களும் சேர்ந்து கொண்டு, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று வலியுறுத்தினர். பின்னர், அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்று, ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.
இந்த புகார் தொடர்பாக அறிக்கை கேட்டு ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. தலைமை தேர்தல் அதிகாரியின் விளக்கத்தை பெற்று அதனடிப்படையில் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பும் என தெரிகிறது.
இதற்கிடையே, ராகுல்காந்தி தான் உயிரை விட்டாலும் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், முன்பு மோடி ஒரு கூட்டத்தில் ரேப் கேபிடல் டெல்லி என்று பேசியிருந்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.