ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிருப்தி.. நாளை வழக்கு விசாரணை..
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். போலீசாரின் அத்துமீறல்கள் குறித்து நாளை விசாரிப்பதாகவும் அவர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக வளாகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஜந்தர் மந்தர் பகுதிக்கு பேரணியாக செல்ல முயன்றனர். சிறிது தூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மாணவர்கள் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அப்போது வன்முறை வெடித்தது. போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
கலவரத்தில் இருந்து தப்புவதற்கு மாணவர்கள் பலரும் பல்கலைக்கழக விடுதிக்குள் சென்றனர். அப்போது போலீசார் அங்கு திரண்டு சென்று, மாணவர்களை சிறைபிடித்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபடாமல் நூலகத்தில் இருந்த மாணவர்களையும் போலீசார் பிடித்து சென்றதாகவும், மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்புகை வீச்சு என்று கடுமையாக தாக்கியதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பாக சீனியர் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி, ஜமியா பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் சென்று மாணவர்களை தாக்கியுள்ளனர். மிகவும் மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இதை நீதிமன்றம் தாமாகவே பொது நலவழக்காக எடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஒரு விசாரணை கமிஷன் அமைத்து ஜமீயா பல்கலைக்கழகத்திற்கு போலீசாரின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.
இதை கேட்ட தலைமை நீதிபதி பாப்டே, நாங்கள் மனித உரிமைகளை பாதுகாப்பது குறித்த கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். அதேசமயம், மாணவர்கள் என்ற போர்வையில் கலவரங்களில் ஈடுபடுவதையும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதையும் ஏற்க முடியாது. முதலில் வன்முறைச் செயல்கள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.
அப்போது தான் நாங்கள் மனித உரிமைமீறல்கள் குறித்து விசாரிப்போம். நாங்கள் அமைதியான போராட்டங்களுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றார். இதன்பின்னர், மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து நாளை(டிச.17) விசாரிப்பதாக தெரிவித்தனர்.