அசிஸ்டன்ட் டைரக்டர் ஆன பிரகாஷ்ராஜ்... பிரபல இயக்குனர் மெசேஜ்..
நான்கு மொழி நடிகர்கள் ஒருசிலரே உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரகாஷ்ராஜ். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிப்போடு நிற்காமல் பட தயாரிப்பு, இயக்குனர் பொறுப்புகளையும் ஏற்றதுடன் அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே தோனி, உன் சமையல் அறையில், மனவூரி ராமாயணம் (தெலுங்கு) உட்பட 4 படங்களை டைரக்டு செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் தற்போது உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறாராம். இது என்னடா புதுக்கதை என்று பார்த்தால் சுவாரஸ்யமான விவரம் வெளியானது.
பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்திருக்கிறார். மராட்டியில் நானா நடித்த நட்சாம்ராட் என்ற படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. நானா படேகர் வேடத்தை பிரகாஷ்ராஜ் எற்று நடிக்கிறார். இப்படத்தை கிருஷ்ணவம்சி டைரக்டு செய்கிறார். இசை அமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் சொல்வதை உள்வாங்கிக்கொண்டு தனது பாணியில் நடிப்பை வெளிபடுத்தி வரும் பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் கிடைக்கும் இடைவெளியில் படத்தின் ஆர்ட் டைரக்டருக்கும், இயக்குனர் கிருஷ்ண வம்சிக்கும் அசிஸ்டன்ட் போல் உதவிகள் செய்கிறார்.
அதை வீடியோவாக எடுத்து கிருஷ்ண வம்சி வெளியிட்டிருக்கிறார். அத்துடன் 'எனது படக்குழுவில் புதிய உதவி இயக்குனராக சேர்ந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவரை கடவுள் காப்பாற்றட்டும்' என ஜாலியாக கமென்ட் வெளியிட்டிருக்கிறார்.