அண்ணி ஜோதிகாவுடன் நடித்த அனுபவம்.. தம்பி படம் உருவானது பற்றி கார்த்தி..
அண்ணி ஜோதிகாவுடன் தம்பி படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் கார்த்தி பகிர்ந்துக் கொண்டதாவது.
தம்பி படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதி கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிய தால், அவரிடம் ஆலோசித்திருக்கிறார்கள். அண்ணி சம்மதம் தெரிவித்துள்ளார். எனக்கு முன்பே அண்ணி கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
என்னிடம் அதைக் கூறும்போது உற்சாகமாக இருந்தது. இருவரும் பணியாற்ற வேண்டுமென்பதால் கதாபாத்திரத் திற்கு முக்கியத்துவம் இருக்குமா? என்று யோசித்து தான் முடிவெடுத்தோம். அண்ணா சூர்யாவுக்காகவும் அண்ணிக்காகவும் நடிக்க ஒப்புக்கொண்டேன் மேலும், ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் இன்னும் சிறப்பு கூடியது.
ஜீத்துவின் த்ரிஷ்யம் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் இருக்கும். அதேபோல், அவர் கதை கூறும் பாணியும், நேர்த்தியும் உறுதியாக இருக்கும். அவர் கதைக்குள்ள வந்தபிறகு இன்னும் சற்று மெருகேற்றினார். இப்படம் குடும்ப கதையை மையப்படுத்தியது என்பதால், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.
எனது அண்ணியை படப்பிடிப்பில் பார்க்கும் போது வீட்டில் எப்படியோ.. அப்படித்தான் தோன்றினார். எந்த வித்தியாசமும் தெரிய வில்லை. ஆனால், அவர் பணிபுரிந்து நான் பார்த்ததில்லை. இங்குதான் பார்த்தேன். படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேசவேண்டும்? என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு தயாராக வருவார். அவருடைய கலாச்சாரம் எனக்கு பிடித்திருந்தது.
அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள பெரிய உழைப்பு தெரிந்தது.மேலும், இப்படத்தில் அவருடைய கதாபாத்தி ரத்தின் தன்மை வேறு. என்னுடைய கதாபாத் திரத்தின் தன்மை வேறு. ஆகையால், என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக் கிறேன். இந்த கதாபாத்திரம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்திற்கு ஒன்றி இருப்பதால், நடிப்பது சுலபமாக இருந்தது. இப்படத்தின் கதை கோவாவில் ஆரம்பிக்கும். அங்கிருக்கும் மக்களுக்கேற்ப பார்வையை மட்டும் சிறிது மாற்றினோம்.
அங்கிருந்து கதை மாறும்போது என்னுடைய கதாபாத்திரமும் மாறும்.சத்யராஜ் சார் இத்தனை படங்கள் நடித்துவிட்டோம். நமக்கு எல்லாம் தெரியும் என்றில்லாமல், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய முதல் படம் மாதிரி இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இத்தனை ஆண்டுகள் நடித்தாலும் சிறிதும் சலிப்படையாமல் ஆர்வத்துடன் ரசித்து செய்கிறார்.
இவ்வாறு கார்த்தி கூறினார்.