தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை நிறுத்தியது மம்தா அரசு..

தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருமாநிலங்களிலும் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. மேலும், டெல்லி உள்பட பல நகரங்களிலும் மாணவர்கள் போராட்டமும் வெடித்தது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அடுத்ததாக தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதன்படி, மக்களின் பூர்வீகம் பற்றி கணக்கெடுத்து, குடியுரிமை வழங்கப்படாது என்றும் கூறப்பட்டு வருகிறது. இதற்கும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில், மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தானே முன்னின்று நடத்தினார். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை நிறுத்தவும் உத்தரவிட்டார். இது தொடர்பாக மாவட்டக் கலெக்டர்களுக்கு கூடுதல் அரசு செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தல், புதுப்பித்தல் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது. பொது அமைதியை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

More News >>