ஜமியா போராட்டம்: போலீசின் கொடுங்கோல் செயல்.. பிரியங்கா காந்தி கண்டனம்

ஜமியா பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியது கொடுங்கோல் நடவடிக்கை என்று பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருமாநிலங்களிலும் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.

டெல்லியிலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. நேற்று முன் தினம்(டிச.15) ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது அந்த பல்கலைக்கழக விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், சுமார் 150 மாணவர்களை வெளியே இழுத்து வந்தனர். இதனால், அங்கும் வன்முறை வெடித்தது. மாணவர்களும், போலீசாரும் மாறி மாறி கற்களை வீசினர். நள்ளிரவிலும் டெல்லியில் பதற்றமாக காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து, டெல்லி மட்டுமின்றி உ.பி.யில் உள்ள அலிகார் பல்கலைக்கழகம், ஐதராபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் கூட மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை 4 மணிக்கு இந்தியா கேட் பகுதியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வந்தார். அவர் 2 மணி நேரமாக அவரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அமர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

அப்போது அவர் கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தின் மீது அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் ஆன்மா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஆன்மாவே இளைஞர்கள்தான், அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். நானும் ஒரு தாய்தான். இப்படி போலீசார் தாக்கியது மிகக் கொடுமையானது. பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது கொடுங்கோல் செயல் என்று கூறினார்.

More News >>