அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச்சிலை திறப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது உருவச்சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனுடன், அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழான நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழும் வெளியிடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது.
இதில், அம்மா ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி, 500 டாஸ்மாக் மூடுதல், 1500 கைதிகளை விடுதலை செய்தல் என அறிவித்தார். இதுமட்டுமின்றி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை திறக்கப்படுவதாகவும் அறிவித்தார்.
இதன் நிகழ்ச்சி இன்று காலை, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் சிலையை திறந்து வைத்தனர். இரட்டை இலை சின்னத்தை காட்டுவது போன்று ஜெயலலிதாவின் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு ஜெவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது புரட்சித்தலைவி அம்மா என்ற நாளிதழும் ஜெவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.