குடியுரிமை சட்டமா.. குழிபறிக்கும் சட்டமா.. ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கேள்வி

குடிமக்களின் குடியுரிமையை பறிப்பதுதான் குடியுரிமைச் சட்டமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கனிமொழி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டங்களில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி, ஐ.நா.வில் பேசும் போது யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சொல்கிறார். அது உண்மையானால் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் தேவையா? வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம், ஏன் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது? இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

பாஜக அரசுக்கு மக்களைப்பற்றி கவலையில்லை. கவலைப்பட்டு இருந்தால் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால், இப்போது எதையும் செய்ய முடியாத கொடுமையான ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டை குட்டிச்சுவராக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே விஷத்தை கலக்குகிறார்கள். சிறுபான்மையினரை மாநிலம் வாரியாக வகைப்படுத்த முடியாது. ஒட்டுமொத்தமாகவே வகைப்படுத்த வேண்டும். குடிமக்களின் குடியுரிமைகளை பறிப்பதுதான் குடியுரிமைச் சட்டமா? இது குடியுரிமைச் சட்டமா, அல்லது குழிபறிக்கும் சட்டமா?

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

More News >>