குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்தது தமிழினத் துரோகம்.. கமல்ஹாசன் விமர்சனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பது தமிழினத்திற்கு செய்த துரோகமாகும் என்று கமல் கருத்து கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை பிரிக்கிறது. பாகிஸ்தான் இந்துக்களுக்கு ஒரு நியாயம், இலங்கை இந்துக்களுக்கு ஒரு நியாயமா? கிராமங்களில் விவசாயிகள் வறுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த தற்கொலைகளை தடுப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்காமல், மத ரீதியாக மக்களைப் பிரிக்கப் பார்க்கிறது. மக்கள் எதிர்த்து போராடினால் குரலை நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

பின்னோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரி செய்யும் நடவடிக்கையை எடுக்காமல் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அவசரமாக கொண்டு வருவது ஏன்? கேள்வி கேட்கும் குரலை நெரிப்பது என்பது அரசு பயங்கரவாதம். மாணவர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீது விழுந்த அடியாகும். ஜனநாயகத்தை நாம் காத்திட வேண்டும். மக்களுக்கு எதிரான தனிநாயகத்தை ஒழிக்கும் வரை நான் ஓய மாட்டேன்.

தேசவிரோத சக்திகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. சர்வாதிகாரத்திற்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கிதான் எழ வேண்டும்.  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்திருப்பது தமிழ் இனத்திற்கும், தேசத்திற்கும் செய்த துரோகம்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

More News >>