அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையில் பாஜக இடம் பெறாது.. அமித்ஷா பேட்டி
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், அதற்கு பதிலாக வேறொரு பகுதில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதற்கும் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித்ஷா, ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், அயோத்தியில் இன்னும் 4 மாதத்திற்குள் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்படும் ராமர் கோயில் அறக்கட்டளையில் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகின. இதை அமித்ஷா மறுத்துள்ளார்.
இது தொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ராமர் கோயில் அறக்கட்டளையில் பாஜகவைச் சேர்ந்த எவருமே இடம் பெற மாட்டார்கள். அதே போல், ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அரசு நிதி எதுவும் ஒதுக்கப்படாது. அந்த அறக்கட்டளையே மக்களிடம் நன்கொடைகளை பெற்று கோயிலை கட்டும் என்று கூறியுள்ளார்.