ஜனாதிபதியுடன் சமாஜ்வாடி எம்.பி.க்கள் சந்திப்பு.. குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அசாம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

டெல்லியில் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போரட்டத்தில் கலவரம் வெடித்தது. பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். மேலும், பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கினர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நேற்று மாலை ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், மாணவர்கள் மீது தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் ஏற்காத குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் அணியில் சேராத பகுஜன்சமாஜ் கட்சியினர் இன்று தனியாக சென்று ஜனாதிபதியை சந்தித்தனர். அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அவரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடுத்தனர்.

More News >>