குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் டிச.23ல் திமுக கூட்டணி பேரணி...
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னையில் வரும் 23ம் தேதி திமுக கூட்டணி சார்பில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், மாணவர்களும் பங்கேற்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தால் தங்களின் மொழி, இன அடையாளங்கள், உரிமைகள் பாதிக்கப்படும் என்று அம்மாநில பூர்வகுடி மக்கள் கூறுகின்றனர்.
இதே போல், இந்த சட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களை சேர்க்காததால் தமிழகத்திலும் அதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் நேற்று(டிச.17) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக இன்று (டிச.18) அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக பொருளாளர் துரைமுருகன், தலைமை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மல்லை சத்யா, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின்னர், திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வரும் 23ம் தேதி திமுக கூட்டணி சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு என்ன தலைப்பில் மிகப் பெரிய பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்து அமைப்புகளை சார்ந்தவர்களும், மாணவர்களும், பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.