குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: சாத்தான் வேதம் ஓதுவது.. திமுகவை தாக்கும் ஜெயக்குமார்..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் அனைத்து கட்சிக் கூட்டம், சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதினார்கள். மத்திய அரசில் திமுக இடம் பெற்றிருந்த போது, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

ஆனால், இப்போது அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது என்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.

தமிழக வணிகர்கள் மற்றும் சிறு தொழில் துறையினரின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,338 கோடி மற்றும் ஐஜிஎஸ்டி ரூ.4,500 கோடியை வழங்க வலியுறுத்துவோம்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

More News >>