கோவில்பட்டி எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகடமி விருது.. சூல் நாவல் பெற்று தந்தது
கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுடைய சூல் என்ற நாவலுக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது.
நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது சாகித்ய அகாடமி விருதாகும். மத்திய அரசின் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.தமிழில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதை எழுத்தாளர் சோ.தர்மன் வென்றுள்ளார். சூல் என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி என்ற ஊரைச் சேர்ந்த சோ.தர்மனுடைய இயற்பெயர் சோ.தர்மராஜ்.
இவர் ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட 7 நூல்களை எழுதியுள்ளார். கூகை என்ற நாவலுக்காக தமிழக அரசின் விருதை பெற்றிருக்கிறார். கரிசல் மண் சார்ந்த விவசாயிகளின் வாழ்வியலையும், விவசாயிகளின் துயரங்களையும் பதிவு செய்து சூல் என்ற நாவலை வெளியிட்டார். இந்த நாவலுக்குத்தான் தற்போது சாகித்ய அகடமி விருது கிடைத்துள்ளது.
விருது குறித்து சோ.தர்மன் கூறுகையில், "நான் நடிகர் அல்ல, எழுத்தாளன். சூரியகாந்தி போல அல்லாமல் மூலிகை போல் இருப்பேன். எந்த விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். தற்போது மத்திய அரசிடம் இருந்து விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.