குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் தடையை மீறி பந்த் போராட்டம்.. போலீஸ் குவிப்பு..
கர்நாடகாவில் இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று பந்த் நடத்துகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, 2014ம் ஆண்டுக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாத மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, சமணர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் மறுப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
இந்நிலையில், கர்நாடகாவில் இடதுசாரி கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து பந்த் நடத்துகின்றன. ஆனால், பந்த் மற்றும் கண்டனப் பேரணிகள் நடத்த அனுமதியில்லை என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜ் தெரிவித்திருக்கிறார். மேலும், பெங்களூரு உள்பட கர்நாடகாவின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது. எனினும், பெங்களூருவில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
குறைவான எண்ணிக்கையில் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. டவுன் ஹால் அருகே போராட்டக்காரர்கள் வருவதை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காலை 11 மணி வரை அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை காங்கிரஸ் கட்சிதான் தூண்டி விடுகிறது என்றும், முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் காப்பது அரசின் கடமை என்றும் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.