எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது.. ரஜினி கருத்து
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், முஸ்லிம்களை மட்டும் ஒதுக்கி வைத்து, மத அடிப்படையில் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள், சமூக அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டத்தால் தங்கள் மொழி, இன, உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி, அதற்காக சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன.
போராட்டங்களுக்கு ஆதரவாக இந்தி, தமிழ், மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என்று திரையுலகினர் பலரும் கருத்து கூறியுள்ளனர். பிரபல நடிகர்கள் சில போராட்டங்களில் கலந்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டுநலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.இவ்வாறு கூறியுள்ளார்.