குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரித்ததில் எந்த நிர்ப்பந்தமும் இல்லை.. சமாளிக்கும் எடப்பாடி பழனிசாமி..

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ஆதரித்து அதிமுக வாக்களித்தற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு தேசியக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று(டிச.19) மாலை நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் அவர் தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பினார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் எந்த பிரச்னையும் இல்லை. சில இடங்களில் மட்டும்தான் போராட்டங்கள் நடைபெற்றன. சட்டம்ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. அமைதியாக போராட்டம் நடத்தினால் தவறில்லை.

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனாலும், போராட்டம் நடத்தியே ஆக வேண்டும் என்பவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது? எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே ஒரு குற்றச்சாட்டை கூறி போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறார்கள்.

அதிமுக, இந்த சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்கு பின்னால் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. இந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும். உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபடி உறுதியாக நடக்கும். மாநில தேர்தல் ஆணையத்தின் மீது தொடரப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட்தான் தீர்வு காண வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கையை இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு பேட்டியளித்திருந்தார். குடியுரிமை திருத்த சட்டமசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு துணை செயலாளர் தமக்கு போனில் உத்தரவிட்டதாக அவர் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு 2வது முறையாக எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

More News >>