குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவு அதிகாரி தகவல்..
இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களை கவனித்து வருவதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இந்தியாவிடம் பேசுவோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது :
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், அது சட்டமாக அமல்படுத்தப்பட்டதற்கு பின்பு நடைபெறும் போராட்டங்களை அமெரிக்கா கவனித்து வருகிறது.
இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் அமெரிக்கா மதிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை அமெரிக்கா அறிந்திருக்கிறது. சிறுபான்மையினர் உரிமைகள், மதச்சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவை ஜனநாயகத்தின் தூண்கள். எனவே, இந்த விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா தனது கருத்துக்களை தெரிவிக்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த தகவலை ஏ.என்.ஏ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.