ஐ.நா. ஆய்வு செய்யட்டும்... நாங்கள் ஒதுங்கி விடுகிறோம்.. மம்தா பானர்ஜி பேச்சு..
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஐ.நா. ஆய்வு செய்து வாக்கெடுப்பு நடத்தட்டும். நாங்கள் எல்லோரும் ஒதுங்கி விடுகிறோம் என்று மம்தா பானர்ஜி பேசினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக கூறி, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேற்கு வங்கத்தில் இந்த சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் ரயில் நிலையம் கொளுத்தப்பட்டது. அதன்பிறகு, முதல்வரும், திரிணாமுல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, மக்கள் அமைதியாக போராட வேண்டும் என்று கூறி தானே களத்தில் குதித்தார்.
கடந்த நான்கு நாட்களாக தினமும் பேரணிகளை மம்தா நடத்தி வருகிறார். கொல்கத்தாவில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்திய மம்தா பானர்ஜி, கூட்டத்தில் பேசியதாவது:
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க என் அப்பாவின் பிறப்பு சான்றிதழை கேட்கிறீர்கள்.. அதை நீங்களும்(பாஜக) கொடுக்க வேண்டும் அல்லவா? இந்துக்களிடம் எந்த ஆதாரமும் கேட்க மாட்டார்களாம். மற்றவர்களிடம் செத்து போன மூதாதையரின் சான்றிதழ்களை கேட்பார்களாம். இதன் மூலம், பாஜகவினர் இறந்த மூதாதையரை அவமானப்படுத்துகிறார்கள். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு தேவையான அறிவு அவர்களிடம் இல்லை.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகளும், மற்ற அமைப்புகளும் போராட்டம் நடத்துகின்றன. இந்த சட்டத்தின் மீது ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தட்டும்... ஐ.நா. அமைப்பு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஆய்வு செய்யட்டும்... அனைத்து கட்சிகளும், அனைத்து அமைப்புகளும் இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கி விடுகிறோம். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.