அசாமில் 10 நாளுக்கு பின் மொபைல் இன்டர்நெட் வசதி...
அசாமில் போராட்டங்கள் ஓய்ந்த நிலையில், மொபைல் இன்டர்நெட் வசதி மீண்டும் செயல்படத் தொடங்கியது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான் அந்த சட்டம்.
ஆனால், அசாமில் அப்படி ஏற்கனவே குடியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் மொழி, இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு, பூர்வீகச் சொத்துக்கள் போய் விடும் என்று கூறி அசாம் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. மேலும் வதந்திகள் பரவியதால் மொபைல் இன்டர்வெட் வசதிகள் துண்டிக்கப்பட்டன. தற்போது போராட்டங்கள் ஓய்ந்திருக்கின்றன. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக துண்டிக்கப்பட்டிருந்த மொபைல் இன்டர்நெட் வசதிகள் மீண்டும் இன்று(டிச.20) முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இதற்கிடையே, அசாமில் ஆளும் பாஜக முதல்வர் சோனாவால், குடியுரிமை திருத்தச் சட்டத்தால் அசாம் மக்களின் அடையாளங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்கள் நலனை நாங்கள் பாதுகாப்போம். மக்களின் ஒத்துழைப்புடன் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.